வியாழன், 9 ஜூலை, 2020

உயிர் பாசம்.

பனையோலை தடுக்கில் பிரண்டு படுக்க பக்கத்து செத்தையில் கீழ் வரிச்சு தடியில் குட்டி நாகம் தன் தலையை தேய்க்கரண்டி அளவு தூக்கி படம் எடுத்தார் அழகாக,என்ன தான் அவர் அழகாக இருத்தாலும் பாம்பு என்றால் வேர்க்காமல் இருக்குமா ஐயோ என அலறல் அடக்கமுன் அப்பாச்சி சின்ன தடியால் ஆளை தூக்கி போடா நாகதம்பிரானே இந்த பக்கமா என கோயில் உள்ள திசை நோக்கி ஆளை தூக்கி போட்டா...

எந்த உயிரையும் அடிச்சு கொல்லும் அளவுக்கு கிராமங்களில் மக்கள் மனம் இருப்பதில்லை எதோ வழிதவறி வந்திருக்கும் கலைச்சு விடு என்பதுதான் அவர்களின் ஆக கூடிய வன்முறை சொல்.

அதிலும் கோயிலுக்கு பக்கதில் வீடு இருத்தா பாம்புக்கு எல்லாம் தனி மரியாதை பிணைத்து ஆடும் சாரையும்,மூர்க்கனும் தடிகொண்டு போக முன்னம் கத்தி சத்தம் போட்டு அடிக்க கூடாது ஒன்று செத்தா மற்றது பழிவாங்கும் என்னும் கதையை சொல்லி அவைகளை பாதுகாத்து விடுவார்கள்,வெள்ளை துணி போட்டு எடுத்து பெட்டியில் வைச்சா காசு வரும் என்பதெல்லாம் வேறு கதை ...

எடுப்பாக திரியும் கோழிசேவல் நாலுவீட்டு வேலி தாண்டி வந்து கன்னி கோழியை கலைச்சு திரிவார்,பார் ஆளை கொண்டை பூவும் கலரும் மாப்பிளை கணக்கா என தன் வீட்டு சேவலாக இல்லாது விட்டாலும் அதை ரசிக்கும் மனம் முன்னோர்களிடம் கொட்டி கிடத்தது...

எப்பொழுதும் மாமி,அத்தை வீடுகள் போனால் மருமக்களுக்கு என தனி கவனிப்பு எல்லாம் இருக்கும் அங்க பெண் எடுக்குறமோ இல்லையோ நம்ம மருமகன் என சொல்லும் மாமியின் குரலில் இருக்கும் அந்த பாச உணர்வுக்கு மொழிகள் இல்லை சொல்ல..

எப்பொழுதும் சக மனிதன் உறவு என்பதற்கு அப்பால் சென்று மிருகங்கள் மீதும் அலாதியான அன்பை திகட்ட கொடுத்த அந்த காலம் இனி வருமா என்னும் மீள் நினைவுகளுடன் இன்று சிமாட் போனில் கலைச்சு கலைச்சு சுடுபடும் விளையாட்டை விளையாடும் பிள்ளையை பார்த்தபடி இருத்து யோசிக்க வேண்டிய நிலையில் வாழ்க்கை காற்றில் மிதக்கும் பலூன் ஆகி போகிறது திசைகள் இன்றி.

#ஒக்கட்டி

லுமாலா சைக்கில்காரி.

அந்த லுமாலா சைக்கிள் ஒரு மையில் தூரம் வரும் போது தெரிந்துவிடும் அவள் வருவது கிறீஸ் போடாத செயினின் சத்தமும் செயின் கவரில் தேய்க்கும் பெடலும் அதுக்கு சாட்சியாக இருக்கும்,கொஞ்சம் கிட்டவாக வந்து விலகி போகும்வரை அவள் சைக்கிள் மிதிப்பதை நிறுத்தியிருப்பாள் அதன் சத்தம் அவளுக்கு பிடித்திருத்தாலும் ரோட்டுக்கரையில் சும்மா நிண்டு மிலாந்தும் பெடியலுக்கு சிரிப்பை கொடுக்கும் போதாதற்கு அவளை ஒரு முறைக்கு இருமுறை திரும்பி பார்க்கவும் பண்ணும்...

தன் தொப்பியை நெற்றியின் கீழ்வரை இழுத்து விட்டு முன்சில்லை மட்டும் பார்த்தடி காற்றில் எழும் சட்டையை ஒருகையால் அழுத்தியபடி அவள் லாபகமாக வெட்டி ஓடும் அழகை மட்டும் எழுதினால் தனி பக்கம் வேணும் என்பதால் தவிர்த்து...

ஒவ்வெரு சனி,ஞாயிறும் ரீயூசனுக்கு அவள் வந்து போவது என்பது அந்த வீதியில் பலருக்கு நேரம் கணிக்க உதவியாக கூட இருத்திருக்கு கீச்சிட்டான் கிழக்க போயிட்டா மணி ஐந்து ஆகியிருக்கும் என்பது அந்த வீதியில் மில்லில் வேலை செய்யும் ஐயாக்கு கூட தெரியும்...

சைக்கிள் மட்டுதான் உறுதியற்று இருந்தது ஆனால் அவள் மனம் என்பது உறுதியாக இருந்தது படிக்கனும் ஓ/எல் எப்படியும் பாஸ் பண்ணனும் அதன் பின் எங்காவது ஒரு இடத்தில் வேலைக்கு போகலாம் எல்லாத்துக்கும் உதவும்,வருவாய்துறைக்கு சைக்கிள் டிக்கெட் கிழிக்கும் வேலைக்கு கூட ஓ/எல் சித்தி வேணும் என ரீயூசன் வாத்தி அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போகும்...

இந்த முறை ஊருக்கு போகும் போது அதே மில் ஐயாவிடன் பேசிட்டு இருக்கும் போது கீச்சிட்டான் மேற்க போகுது மணி ஐந்து என சிரிச்சார் அவள் தன் சூட்டி மோட்டார் சைக்கிளில் கோன் அடிச்சு சிரித்தபடி போனாள்,பதினைத்து வருடம் பின் பார்த்த முகம் அன்று தொப்பி மறைத்திருந்தது இன்று ஹெல்மெட் மறைத்திருக்கு அவளா ஐயா இவள் என ஆச்சரியமாக பார்த்து நின்றேன் ..

அப்ப ஐயா சொன்னார் அவள் தான் அந்த மக்கள் வங்கியின் முகாமையாளர் தம்பி என.👍

#ஒக்கட்டி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

அவள் கடந்த பொழுதுகள் ..!

நேற்றிரவு அவள்
காதருகில் தூங்கவிடாது
நிறையப் பேசினாள்

எங்கெல்லாம்
என்னை கடந்து போனாளோ
அவைகள் பற்றி
அப்பொழுது
தன்னுள் தான்
பேசிய ரகசியங்களை போட்டுடைத்து
காதல் வயப்பட்ட 
அத்தருணங்களை சொல்லிக்கொண்டு சிரித்தாள்...

மனதுக்குள்ளே
பட்டாம்பூச்சிகள் பறக்க
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் இடங்களில்
அந்த பொழுதுகளை மீண்டும் இரைமீட்டியபடி நான் சுற்றிக்கொண்டு இருந்தேன்

அவ்வேளைகளில்
அவள் என்னை கடந்து போனது
ஒரு சம்பவம்

ஆனால், இன்று காதலில்
வாழ்வில்
ஒரு உன்னத தருணங்கள்
என்பதை நான் உணர்த்து கொண்டு இருந்தேன் .


புதன், 12 அக்டோபர், 2016

விரல் நீட்டுவதை நிறுந்துங்க மேதைகளே.

இலங்கைதீவில் தமிழர்களுக்கான உரிமை சம அந்தஸ் என்பது எல்லாம் இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்னமே பேசத்தொடங்கி போராட தொடங்கி நடந்து வருகிறது என்பது வரலாறு,இது இலங்கை சுகந்திரம் பெற்றபின்னும் சிங்கள பெரும்பான்மை சமூகம் தங்களின் நலனும் நலன் சார்த்தும் எடுத்த முடிவுகளும்,அதற்காக உருவாகிய யாப்பு முறையுமே தொடர்த்து சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைக்கு போராடும் நிலையில் கொண்டு செல்கிறது.

ஆக அதற்கான ஓர் தீர்வினை எட்டி வரும் காலமும் வரும் தலைமுறையும் ஒரு சுபீட்சமான வாழ்விற்கு செல்வதற்கு அடிப்படையில் உள்ள இன முரணின் தோற்றம் களையப்பட்டு நிவர்த்தி செய்யவேண்டிய தேவை தமிழர்களை விட சிங்களவர்களுக்கு தான் அதிகம் இருக்கிறது,எந்நேரமும் ஒரு பதட்டமும் உசார் நிலையம் எவரையும் நம்பாத போக்குடன் சிங்களம் எவ்வளவு காலத்துக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்துட முடியும்,அதன் போக்கை மாற்றும் அல்லது இன்னொரு ஆயுத போருக்கு வழியமைக்க கூடாது என்னும் நிலையில் தான் ஒருகாலமும் சேராது இருந்த இரண்டு பெரும் தேசிய கட்சிகள் உள்பகை,உள் முரண் பாராது மன ரோஷம் எல்லாம் விட்டு ஒன்று சேர்த்து ஆட்சி செய்யும் நிலையும்,அதனூடாக அதிக பெரும்பான்மை பெற்று தாம் நினைத்த,யாப்பு திருத்தம் சட்ட மூலங்களை பாராளுமன்றில் வெற்றி பெற வைக்க முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த ஆட்சி மாற்றமும் அரசின் இன பிரச்சினைக்கான தீர்வின் ஒரு முன் ஏற்பாடும் ஆக இருக்கிறது.

இவைகள் எல்லாம் கால இழுத்தடிப்பாக இருந்தாலும் கூட வரும்கால இலங்கையின் நலன் கருதி இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை சிங்கள தலைமைகளுக்கு கட்டாயம் என்னும் நிலை இருக்கிறது,அல்லது போனால் உலக வல்லரசுகளின் அதிகார போக்கில் சிக்கிசீரழிந்து இரு இனங்களும் நிம்மதி அற்று வாழும் ஒரு நிலையே உருவாகும்,ஆதலால் தான் ஒற்றை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவந்து சமஸ்டி பற்றி பேசும் அது பற்றி சிங்கள மக்களுக்கு விளக்கும் வேலைகளை மெதுவாக செய்ய தொடங்கி இருக்கிறது சிங்களம் அதன் தலைமைகளும்.

ஆனால் தமிழர்கள் மட்டும் இன்னும் ஆயிரம் வருடங்கள் போனாலும் தங்களுக்குள் இருக்கும் உள் பகை,பழிவாங்கல்,சாதிய பேச்சு என காட்டுவாசிகள் போல உலாவருவது காண முடிகிறது,இங்கு உள்ள பிரச்சினை யாதெனில் நான் மட்டுமே பேசவேண்டும் என்பதும்,நான் மட்டுமே வழிநடத்த வேண்டும் என்பதும்,நான் மட்டுமே தலைவனாக இருக்கு தகுதியுள்ளவன் என்பதும்,நான் மட்டுமே அறிவாளி என்பதும்,நான் மட்டுமே படித்த மேதாவி என்பதுமாக தமிழர்களிடம் காலம் காலம் கடத்தப்படும் ஜீனில் இருந்து தொடர்கிறது இந்த போக்கு.

என்றைக்கும் நாம் எவரையும் குறிப்பாக தமிழ் தலைமைகள் எவரையும் முன்மாதிரியாக கொண்டும்,தலைவர்களை வழிகாட்டியாக கொண்டும் ஒரு லட்சியம் ,கொள்கையில் நின்று போராடியது இல்லை இது தமிழர்களில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் ஆகும்,நான் ஏன் அவருக்கு கீழே நிக்கவேண்டும் என்பதும் என்னைவிட அவர் என்னத்தை பெரியதாக சாதித்தார் என்பதும் தான் இங்குள்ள உளவில் பிரச்சினை எனலாம்.

இன்றும் கூட புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் குற்றவாளிகள் ஆக்கி,பிரபாகரன் வாழ்வே தகுதியற்றவர் என நிறுவி தங்களை அந்த இடத்தில கொண்டுவந்து நிறுத்த பலர் படாத பாடு படுவதை காணலாம்,இதை அவர்கள் கச்சிதமாக செய்து முடித்தாலும் கூட இலங்கை பிரச்சினை தீர்த்து விடுமா என்னும் கேள்வியை அவர்களிடமே விட்டு விடலாம்,எல்லோரும் பிரபாகரனை விமர்சனம் செய்வதும்,சுய ஆய்வுக்கு அவரை உள்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டி நிக்கும் இந்த அறிவாளிகள் தங்களை ,தாங்கள் சுற்றி நிக்கும் கூட்டுக்களை,தங்களை தூக்கி வைத்திருக்கும் கைகளை முதலில் சுயஆய்வுக்கு உள்படுத்த மறுப்பதுதான் விந்தை.

நீங்கள் தமிழ் தேசியத்தை எந்தப்பக்கம் குறுக்க வெட்டினாலும் அங்கு புலிகளும், அதன் தலைமையும் கண்டிப்பாக வந்தே போகும் ஏனெனில் உங்களை விட அவர்களே தமிழர் நலனுக்கு தங்களை தியாகம் செய்து போராடியவர்கள் என்பதை நீங்கள் மறந்தாலும்,வரலாற்றை திரித்தாலும் கூட தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பதால்.
ஒரு இனத்தின் நலனை ஒரு அமைப்பின் நலனாக இருப்பாக பேசுவதை நிறுத்தி,மக்கள் நலன் சார்த்து பயணிக்க வேண்டிய தேவையை உணருங்கள்.


மரணத்தை பேசி.

மணியோசையில் எழுந்த பொழுதும்
குயிலிசையில் மயங்கிய பொழுதும்
சில்வண்டின் ரீங்காரத்தில் உறங்கிய பொழுதும்
சருகுகள் ஊடே எலிகளை கலைக்கும் சாரையும்
உயிர் காக்க அவை எழுப்பும் அபாய ஒலியும்
இன்னும் மண்டையின் ஓர் ஓரத்தில் நினைவில்

கட்டிலும் மெத்தையும் தலையணையும்
ஏற்காத உடல் எப்பவும் வெறும் தரை தேடி
முதுகில் புற்று புட்டி முட்ட நெளிந்து கிடந்து
உறக்கம் தொலைத்த அந்த கணப்பொழுதுகள்
ஏனோ தெரியவில்லை படு சுகமாய் இருந்ததே
உறக்கத்தில் அவன் இறந்தான் என்பது கூட
இப்பொழுதும் கனவாக தான் உள்ளது


நாகம் கடந்திருக்கும் இல்லை இது புடையன்
வெள்ளை பூரான் போட்டு இருக்கும் ..இல்லை
அடையாளம் நட்டுவக்காலி தான் ..இல்லை
ஆள் நீலம் பெரவில்லை விஷமா இருக்காது
பேசி ஒரு முடிவுக்கு வரமுன்னம் வேட்டொலி
விடை இல்லாமலே புதைக்கப்பட்டான் அவன்.

சனி, 24 செப்டம்பர், 2016

ஒரு நினைவு வந்தது.

இந்த படத்தை எதேற்சியாக பார்த்த போது ஒரு நினைவு வந்தது....
                                      தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் ....

துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்...

அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே.

யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து.
அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா.

அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள்.

இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.


வலிகள் மேல் வன்ம நாக்கால் நக்காதீர்.

                    

எழுதக்கூடாது என பலமுறை எழுதி அழிந்து விட்டு நிம்மதி அற்று உறங்க போயிருக்கிறேன்,காரணம் வேறு ஒன்றும் இல்லை எங்க பல்லை குற்றி நாங்களே ....கூடாது என்பதால்...

ஆனாலும் இன்று அதன் கதையின் வேகமும்,அவர்களின் செயலும், அதன்னூடே எழும் கேலிகள், கிண்டல்கள் ,பேச்சும்,உங்கள் தினவெடுத்த தினாவெட்டுக்களை என் எழுத்து கோல் முனை கொண்டு முறிப்பது அன்றி வேறு ஒன்றும் வழியில்லை எனக்கு....

வித்தியாவின் மரணம் நிகழத்த பின் எழுந்த மனிதாபிமான அலையை ,அதன் உணர்வு பூர்வமான போராட்டங்களை ,அக்குடும்பத்துக்கு உறுதுணையாக நின்ற அனைத்து மக்களும்,நிறுவனங்களும் அமைப்புக்களும்,சமூக ஆவலர்களுக்கும் ,நாம் என்று கடமையுடனே இருக்கிறோம் இருப்போம்....
அதன் இடைவெளில் வித்தியா குடும்பத்துக்கு உதவுறம் என வெளிநாட்டு வாழ் புங்குடுதீவு உறவுகள்,ஒன்றியங்கள் ,சங்கங்கள் வெளிப்படையில் இட்ட அறிக்கைகள் பேச்சுக்கள் பெரும்பாலும் அனைவரும் காதுகள் ஊடாக பாதுகாக்கபட்டது என்பதையும் அனைவரும் அறிவார்கள்....

இவ்வாறன செயல்பாட்டின் அடிப்படையில் கனடா "புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்"ஒரு தொகை நிதியை சேகரித்து இருக்கிறது அது போல் லண்டனில் ஒரு சில தனிநபர்கள் வித்தியாவின் உறவுகள் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,மற்றது சுவிஸில் உள்ள உறவுகளும் சொந்தம் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,ஆனால் இவர்கள் சேகரித்த நிதி வித்தியா குடும்பத்துக்கு கொடுக்கபடவில்லை,இப்ப பிரச்சினை இவர்கள் எமக்கு தரவில்லை என்பது இல்லை இவர்கள் வாங்கிய காசு வித்தியா பெயரை சொல்லி வாங்கியது தான் எமக்கான நெருடல், பிரச்சினை, வேதனை......

வெளிநாட்டில் இருந்து வித்தியா குடும்பத்துக்கு புங்குடுதீவு அமைப்புகளால் கொடுப்பட்ட எனில், அது பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம் மட்டுமே ஆகும்...http://www.pungudutivu.fr/2015/08/b... தொடுப்பை அழுத்தி தொகையை பார்க்கலாம்,மிகுதி எல்லாம் தாம் கொடுத்தாக சொல்லப்பட்ட செய்திகள் ஆகும்அவர்கள் கொடுத்து இருந்தால் ஆதரங்களுடன் வெளியிடலாம் ஒரு பிரச்சினையும் இல்லை ...

ஆனால் இன்று கண்ணகை அம்மன் கோயில் திருவிழாக்கு கூடி இருக்கும், பெரும்பாலும் வித்தியாவை கொலை செய்த கொலையாளிகளின் அண்ணன் ,தம்பி, மாமன், மச்சான், உறவுகள், என அனைவரும் இன்று அங்குதான் நிக்குறார்கள்,அவர்கள் வித்தியா குடும்பத்துக்கு ஐன்பது அறுபது லட்சம் பணம் வந்ததாகவும் ,அதை வைப்பில் இட்டு வாழ்வதாகவும் (இரண்டு தவணைக்கு சட்டத்தரணி வரவில்லை அது வேறுகதை) அந்த கொலையில் தங்கட உறவுகளுக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் ஒரு தோற்றத்தை புங்குடுதீவில் உருவாக்கி வருகிறார்கள்...

நீங்கள் கொளுத்தும்பாவம், உங்கள் பாவ புண்ணிய கற்பூரம் கண்ணகி உங்கள் குலத்தை ஒருநாள் கொளுத்துவாள் என்னும் நம்பிக்கை எமக்கிருக்கு,பால் சட்டி ,தீ சட்டி எடுத்து உங்கள் யோக்கியங்களை நீங்கள் மூடி மறைந்ததால், ஒருநாள் அது உமியில் இட்ட நெருப்பாக உள்ளால் எரிந்து சாம்பல் ஆக்கும் என்னும் திடம் எம்மிடம் இருக்கிறது...

நா கூசாது நீங்கள் பேச்சும் பேச்சை நிறுத்துங்கள்,திருவிழா முடிந்து போகும் போது வேறு ஒரு வித்தியாவை நீங்கள் சிதைக்காமல் போனாலே பெருநிம்மதி அடைவோம்,ஏனெனில் உங்கள் குணங்கள் வெறி குணம் ஆனது கூழுக்கும்,மீனுக்கும் தானே ஊருக்கு திருவிழா செய்ய போறனீங்கள் கடவுள் பக்தியிலா இல்லையே,ஆக நீங்கள் உதவி செய்வது பற்றி இல்லாது, இப்படி எல்லாம் செய்தோம் என பொய்களை அவிழ்த்து விட்டு நல்லவர்கள் போல எப்படி உங்களால் ஊருக்கு உலாவ முடிகிறது,படங்களை பேஸ்புக்கில் போட்டு ஊருக்கு உதவுறம் என போஸ் கொடுத்து பொன்னாடை போர்த்தி சிரித்தபடி நிக்க முடிகிறது,நல்லவர்களே பதில் தரலாம்.

“எரியும் சிதை நெருப்பை அணைக்கலாம் நீறு பூத்த நெருப்பு அணையாது”

#குறிப்பு...::இவை தொடருமாக இருந்தால் தனித்தனியாக பெயர்கள் போட்டு எழுத பெரிய நேரம் எடுக்காது,வித்தியா வீட்டுக்கு வந்த பலர் நாங்க காசுகொடுத்தம் இன்னாரிடம் தந்தவையா என கேட்பதால் அதுக்கு ஒரு முடிவு எடுக்கவே எழுத நேர்த்தது,அந்த பணம் பற்றி நீங்கள் பொதுவெளி அறிக்கை விடுவது உகந்தது.